இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: குடியரசுத் தலைவருக்கு வில்சன் எம்.பி கடிதம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: குடியரசுத் தலைவருக்கு வில்சன் எம்.பி கடிதம்

Veeramani

உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், 'உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஒரு சீரான முறைகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. உயர் நீதிமன்றத்தில் அதிக நீதிபதிகளை கொண்டிருந்தாலும், அந்தக் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.

உதாரணமாக, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 37 நீதிபதிகள் மட்டுமே இருக்கக்கூடிய சூழலில், இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர். அதே நேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் இருந்தும் ஒரே ஒரு ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மட்டுமே உள்ளனர். எனவே, விகிதாச்சார அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும்பொழுதே மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் நியமனங்கள் இருக்க வேண்டும்.

இந்தியா என்பது பன்மொழிகள், கலாசாரங்கள், பண்பாடுகள் ஆகியவற்றை கொண்டிருக்கும் தேசமாக இருப்பதால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவது என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும்பொழுது சமூக நீதியை கடைபிடிக்கவும், மாநிலங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதை உறுதி செய்யவும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்' என்று குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி நேரம் உள்ளிட்ட தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- நிரஞ்சன் குமார்