கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து முதலமைச்சருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் கர்நாடக மாநில முதலமைச்சர் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்யும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சருக்கான போட்டியில் உள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவகுமார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இன்று காலை சந்தித்து பேசினார்.
டி.கே. சிவகுமாருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதால் மரியாதை நியமித்தமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்ததாக, டி.கே சிவகுமார் தரப்பினர் கூறி வருகின்றனர். இருந்தாலும் முதலமைச்சரின் பெயர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையால் இன்று முடிவு செய்யப்படவுள்ள நிலையில் டி.கே சிவக்குமாரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திக்க இன்று பிற்பகல் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் டெல்லி செல்வதாக சொல்லப்பட்டது. இதில் டி.கே சிவக்குமார் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், சித்தராமையா மட்டும் தனி விமான மூலமாக இன்று நண்பகல் 1 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படியே தற்போது சித்தராமையா டெல்லிக்கு புறப்படுகிறார்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் சித்தராமையா ஆலோசனை செய்த பிறகு, முதலமைச்சர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காங்கிரஸ் தலைமை சார்பில் இன்று மாலை வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது