இந்தியா

பட்டாசு விவகாரம்: தமிழக அரசின் மனு நாளை விசாரணை?

பட்டாசு விவகாரம்: தமிழக அரசின் மனு நாளை விசாரணை?

webteam

பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் என்ற அவகாசத்தை தளர்த்தக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், தமிழக அரசு சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம் வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இரவில் வெடிப்பது வடமாநிலத்தவர் வழக்கம் என்றும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடுதலாக அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்றும், கலாசாரத்திற்கு மதிப்பளித்து, காலையில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பசுமைப்பட்டாசுகள் என்றால் என்ன? அதன் கூட்டுப்பொருட்கள் என்ன? பசுமைப்பட்டாசுகளுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால், எல்லோரும் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்தால் அந்நேரத்தில் மாசு அதிகரிக்கும் என்றும் பட்டாசு உரிமையாளர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதனுடன் தமிழக அரசின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.