supreme court, cji d y chandrachud pt web
இந்தியா

உள் ஒதுக்கீடு| அரசின் கொள்கை சார்ந்த முடிவு.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி

பட்டியலின, பழங்குடியின பிரிவில் உள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

PT WEB

பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் எஸ். சி.. எஸ். டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில், அம்மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் அரசு வேலை வாய்ப்புகளில் எஸ்.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், 2004ம் ஆண்டில் இ.வி. சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மீறும் வகையில் இருக்கிறது என்று கூறி, பஞ்சாப் அரசின் சட்டத்தை ரத்து செய்தது.

இதற்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் இது மாநில அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம்

இந்த தீர்ப்பின் காரணமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அருந்ததியினர் உள்ளிட்ட சமூகத்தினருக்கான உள் இட ஒதுக்கீடு என்பது சட்டப் பாதுகாப்பை பெற்றது. ஆனால், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லேலா வெங்கடராவ் உள்ளிட்டோர் சார்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.