காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி என்பது மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே உறுதியாகி உள்ளது. இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில், தான் போட்டியிடப் போவதில்லை என ராகுல் காந்தி அறிவித்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி மிகப் பிரதானமானதாக இருந்தது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கிலாட் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்த நிலையில் உதைப்பூர் பிரகடனத்தின் படி ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற கொள்கையின் காரணமாக அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து திடீரென தனது முடிவிலிருந்து அவர் பின் வாங்கினார். சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக ஆகிவிடக் கூடாது என்ற அசோக் கெலாட்டின் எண்ணமும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டது.
பிறகு கமல் நாத், திக் விஜய் சிங், திவாரி என பல மூத்த தலைவர்களது பெயர்களும் அடிபட்ட நிலையில் இறுதியாக மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல சசி தரூர், கே.என் திரிபாதி ஆகிய இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இன்றைய தினம் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இருவருக்கும் இடையில் நேரடி போட்டி என்பது உருவாகியுள்ளது.
இதில் மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தியுடன் சந்திப்பு, அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடனான சந்திப்பு என அடுத்தடுத்து காய் நகர்த்தல்களை மேற்கொள்ள தற்பொழுது அவர் போட்டியில் முன்னணியில் இருக்கிறார் என ஆருடங்கள் சொல்லப்படுகிறது. இதன் முக்கிய சமிஞ்சைதான் கட்சியின் முதல் மட்ட தலைவர்கள் பலரும் நேரடியாக கார்கே விற்கு ஆதரவு தெரிவித்திருப்பது.
அதே நேரத்தில் சசி தரூருக்கு கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட சிலரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். எனினும் அக்டோபர் எட்டாம் தேதி வரை வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் என்பதால் இருவரில் ஒருவர் வேட்புமனுவை திரும்ப பெற்றாலும் தேர்தல் நடைபெறாது. மற்ற நபர் அண்ணப் போஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார். அது யார்? அல்லது தேர்தல் நடந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அனைவரும் விடை காண ஆவலாய் காத்திருக்கும் கேள்வி இது.
-நிரஞ்சன் குமார்
இதையும் படிக்க: ராஜஸ்தான் கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி - பின்னணி என்ன?