ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாசப் படங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்கும் முயற்சியில் ஒருகட்டமாக கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையங்களை அமைக்கவுள்ளது.
சமீபகாலமாக ஆபாச படங்கள் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு பல குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். அம்மாதிரியான குழந்தைகளுக்கு உதவ, டி-டாட் என்ற டிஜிட்டல் டி-அடிக்ஷன் சென்டர்களை (Digital de-addiction center) கேரள காவல்துறை அமைக்கவுள்ளது. இந்த திட்டம் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக காவல்துறை சமர்ப்பித்த முன்மாதிரிக்கு கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையங்கள் முதலில் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படும்.
இந்த நான்கு இடங்களில் இத்திட்டம் தொடங்குவதற்கு மாநில அரசு சார்பில் ரூ.1.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மையங்களில் மாணவர்களுக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஆலோசனை வழங்கப்படும். கூடுதல் ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு பல்வேறு மாவட்ட மையங்களில் ஆஃப்லைன் கவுன்சிலிங் வழங்கப்படும்.
நாட்டில் எங்கும் இல்லாத வகையில், டிஜிட்டல் அடிமையாதல் ஒழிப்பு திட்டத்தை காவல்துறை கொண்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குழந்தைகளை இந்த அடிமைப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு உதவி கோரி காவல்துறையினருக்கு பெற்றோர்களிடமிருந்து வந்த பீதி அழைப்புகளின் விளைவுதான் இந்த புதிய திட்டம்.
காவல்துறை கூடுதல் இயக்குநர் (ஏடிஜிபி) மனோஜ் ஆபிரகாம் “ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாச படங்களில் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்ற உதவி கோரி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் கவலையடைந்த பெற்றோர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான அழைப்புகள் வருவதால், இதுபோன்ற திட்டத்தை வடிவமைக்க காவல்துறை முன்வந்தது. இந்த திட்டத்திற்கு பொருத்தமான மென்பொருளை உருவாக்குவது குறித்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறினார்.