இந்தியா

முட்டிக்கொள்ளும் சுஷாந்த் தரப்பு - மும்பை போலீஸ் : குழப்பத்தில் சுஷாந்த் விவகாரம்!

முட்டிக்கொள்ளும் சுஷாந்த் தரப்பு - மும்பை போலீஸ் : குழப்பத்தில் சுஷாந்த் விவகாரம்!

webteam

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைச் சம்பவம் சினிமா உலகில் பெரும் அதிர்வலையை
ஏற்படுத்தியது. இவரது தற்கொலைக்கு இந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை
தட்டிப்பறித்ததுமே காரணமாகக் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் தந்தையான பாட்னா, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு
மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை வேறு ஒருவர் கணக்கில் மாற்றியதாகவும் புகார் அளித்தார். இப்படியாக பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் என சுஷாந்தின் மரணம் ஒரு மர்மமாகவே தொடரும் நிலையில் சுஷாந்த் தரப்பினரும் காவல்துறையினரும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்

முன்னதாக பேசிய சுஷாந்தின் தந்தை, சுஷாந்த் உயிருக்கு ஆபத்து என்று பிப்ரவரி 25 ஆம் தேதியே மும்பை, பந்த்ரா காவல்துறைக்கு தெரியும், ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அப்படி எந்த வித புகாரும் பந்த்ரா காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மும்பை போலீஸ், சுஷாந்தின் மைத்துனரும், ஐபிஎஸ் அதிகாரியுமான ஓபிசிங் வாட்ஸப்பில் இது தொடர்பாக ஒரு பதிவை அனுப்பியதாகவும் நேரடியாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என பந்த்ரா போலீசார் தெளிவாக கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தை விதிப்படி அணுக வேண்டாம் என சுஷாந்தின் மைத்துனர் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை என டிஜிபி மறுத்துவிட்டதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இது குறித்து பேசியுள்ள சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் விகாஷ் சிங், மும்பை போலீசார் உண்மையை வெளிக்கொண்டுவர விரும்பவில்லை. இந்த விவகாரம் சிபிஐ வசம் செல்வதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.