இந்தியா

நினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை?- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்!

நினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை?- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்!

webteam

இந்தியாவில் ஆண்டுதோறும் மே.11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினத்தை கொண்டாடி வருகிறோம். எதற்காக இந்த தினம் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறோம் என்று அறிந்து கொள்வோம்.

வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 1998 ஆம் ஆண்டு இதே தினத்தில்(மே.11) தான், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தலைமையில், இந்தியாவில் உள்ள போக்ரானில் இரண்டாவது முறையாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தி முதல் வெற்றி கண்டது. இதனால் உலகின் அணு ஆயுத பட்டியல் கொண்ட நாடுகளில் இந்தியா ஆறாம் இடத்தினை பிடித்தது. உலகமே நம் இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடந்த அந்த சோதனையை நினைவுபடுத்தவும், அறிவியல் தொழில்நுட்பத்தினை வளர்க்கவும், மக்களிடையே அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், மே.11 -1999 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பத்தின் சாதனைகள்:
தற்போதைய காலக்கட்டத்தில், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நாம் கண்விழிக்கும் போதிலிருந்து நம் கண் அயரும்போது வரையும் ஏன் அதன் பின்பும் கூட இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியில்லாமல் மக்களால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டது, அதன் சாதனைகளில் ஒன்று. இந்த அறிவியல் தொழில்நுட்பத்தினால் மக்களின் கடினமான வேலைகளை மிக விரைவில், எளிதில் செய்து முடித்துவிட முடியும். 

பல்வேறு தொழில்நுட்ப ஏவுகணைகள் மூலமாக அனைத்து தகவல்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் கூட தொழில்நுட்பத்தின் பங்கு மிக அதிகம் முக்கியமாக சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். இப்போது கூட ஒடிஷாவில் ஏற்பட்ட ஃபானி புயல் பாதிப்பில் கூட அறிவியல் தொழில்நுட்பத்தினால் ஏற்பட இருந்த பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன என்பது அறிவியல் வல்லுநர்களின் கருத்து.

என்னதான் ஒரு பக்கம் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளால் சாதகமே என்ற நிலை நீடித்தாலும், மறுபுறம் பாதகத்தையும் தருகிறது. இதன் அசுர வளர்ச்சி மனிதனை வேலையே செய்யவிடாமல் சோம்பேறியாக்கிவிட்டது என்பது பலரது கருத்து. இன்னும் சில வருடங்களில் ரோபோக்களே மனிதர்களை ஆளப்போகிறது என்பதில் ஐயமேதுமில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் நல்ல நோக்கத்திற்காகவே கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு சிலர் அதை தவறான காரணங்களுக்காகவே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதனால் நாம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது பழிபோடாமல், அவற்றை நல்லவற்றிக்காக மட்டுமே பயன்படுத்துவோம். தீய நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை கைவிடுவோம்.