கொல்கத்தா மருத்துவமனை எக்ஸ் தளம்
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!

கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடல் அருகே கிழிந்த டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் உடல் அருகே கிழிந்த டைரி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் நிறைய ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கை கையாளும் மத்திய புலனாய்வுப் பிரிவினர், தற்போது அந்த டைரியை கைவசம் வைத்துள்ளதோடு, கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர்தான் இதை எழுதியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த கையெழுத்து நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், அந்தப் பெண்ணுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்ததை அவருடைய பெற்றோர் உறுதிப்படுத்தி உள்ளனர். என்றாலும், அந்த டைரியில் சில பக்கங்கள் காணாமல் போயிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஆரம்பித்த ஒரேநாளில் 10 மில்லியன் சந்தாதாரர்கள்.. உலக சாதனை படைத்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்!

மீதமுள்ள பக்கங்களில் அவருடைய கனவுகள், விருப்புவெறுப்புகள், பெற்றோர் மீது கொண்ட பாசம் ஆகியவை பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர், மருத்துவத் துறையில் ஒரு பெரிய டாக்டராக விரும்பியதாகவும், தங்கப் பதக்கம் வாங்கவும் மற்றும் உயர் பதவிகளை அடைய விரும்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் எம்.டி. படிக்கவும் விரும்பியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும், சில மருத்துவமனைகளின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு அவர், ஒருநாள் வேலை செய்ய வேண்டும் என்று கனவு கண்டதாகவும், அவரது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாள்தோறும் பல்வேறு மர்ம முடிச்சுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது உடலருகே கண்டெடுக்கப்பட்டுள்ள டைரியில் சில பக்கங்கள் கிழிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை | Ex Dean-க்கு எதிராக நிற்கும் பழைய வழக்குகள்.. யார் இந்த சந்தீப் கோஷ்?