இந்தியா

முன்னாள் உலக அழகி குறித்து சர்ச்சை கருத்து: திரிபுரா முதல்வருக்கு கண்டனம்

முன்னாள் உலக அழகி குறித்து சர்ச்சை கருத்து: திரிபுரா முதல்வருக்கு கண்டனம்

webteam

திரிபுரா முதல்வரின் பேச்சு தன்னைக் காயப்படுத்தியுள்ளதாக உலக அழகி பட்டம் வென்ற இந்தியரான டயானா ஹைடன் வேதனை தெரிவித்துள்ளார்

திரிபுரா மாநில முதலமைச்சரான பாஜகவைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது,இந்திய பெண்கள் அழகு சாதனப் (ஒப்பனை) பொருட்களை பயன்படுத்தியதில்லை. அவர்கள் ஷாம்பூவை பயன்படுத்தியதில்லை. இந்திய பெண்கள் தங்களது கூந்தலில் உள்ள பொடுகுகளை அகற்ற இலைகளை (செம்பருத்தி) பயன்படுத்தினார்கள். நம்முடைய பெண்கள் வெந்தைய தண்ணீரை பயன்படுத்தி தலைமுடியை பராமரித்தார்கள். சேற்றை பயன்படுத்தி குளித்தார்கள்” என்று கூறினார்.

அழகிப் போட்டி நடத்துபவர்கள் சர்வதேச மாஃபியாக்கள். இந்தப் போட்டிகள் மூலம் 125 கோடி மக்கள் தொகையில் பாதியளவு உள்ள இந்திய பெண்களை சந்தைக்காக கவர்ந்திழுக்கிறார்கள். அதனால் தான் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பியூட்டி பார்லர் உள்ளது. சர்வதேச நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சந்தையை தக்க வைக்க அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதாகவும், அதற்காகவே, இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேரை உலக அழகி பட்டத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறினார். 

டயானா ஹைடன் கூட 1997ல் உலக அழகி பட்டம் வென்றுள்ளதாகவும், ஆனால் அவரிடம் இந்திய அழகை காணவில்லை என்றும் பிப்லப் தேப் தெரிவித்தார். ஐஸ்வர்யா ராயிடம் மட்டுமே அந்த அழகு உள்ளது என்றும் அவர் கூறினார். பிப்லப் குமார் தேபின் இந்த விமர்சனத்துக்கு ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

முதல்வரின் பேச்சு தன்னைக் காயப்படுத்தியுள்ளதாக டயானா ஹைடனும் வேதனை தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நாம் இந்தியர்கள், நமது தோல் நிறம் பழுப்பு. அழகான, கவர்ச்சியான பழுப்பு நிறம் எனக்கு பெருமையாக இருக்கிறது எனக் கூறினார். பிப்லப் குமார் தேப் ஏற்கனவே மகாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது எனக் கூறி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.