இந்தியா

வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு

வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு

Sinekadhara

இரவு நேரங்களில் வெளிச்சத்திலேயே இருந்தால் அவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது வடமேற்கு மருத்துவத்தின் சமீபத்திய ஆய்வு. இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் வயதானவர்களுக்கு குறிப்பாக, 63 - 84 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இந்த பிரச்னை அதிகளவில் ஏற்படும் என்கிறது இந்த ஆய்வு. மணிக்கட்டில் அணியக்கூடிய சாதனத்தில் 7 நாட்களுக்கு ஒளி வெளிப்பாட்டு அளவை கணக்கிட்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது நிஜத்தில் நடப்பதை வைத்து எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவாகும். இது இரவில் அதிக உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

இரவு நேரத்தில் வெளிச்சம் என்பது ஸ்மார்ட்போன், இரவு முழுவதும் டிவியை ஓடவிடுதல் அல்லது வெளிச்ச மாசுபாடு நிறைந்த நகரம் போன்றவற்றையும் குறிக்கும். இப்போது எங்கு பார்த்தாலும் இரவு பகல் பாராமல் 24 மணிநேரமும் அதிக வெளிச்சம் இருக்கிற சூழலே நிலவுகிறது. வயதானவர்களுக்கு பொதுவாகவே நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவர்கள் வெளிச்சத்தில் இருக்கும்போது அது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை கணக்கிடவே இந்த ஆய்வு என்று கூறுகிறது வடமேற்கு மருத்துவக்குழு.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட 552 பேரில் பாதிக்கும் குறைவானவர்களே 5 மணிநேரத்திற்கு வெளிச்சம் இல்லாமல் இருந்திருக்கின்றனர். மற்ற அனைவரும் அந்த 5 மணிநேரத்திலும் ஏதேனும் சிறிய அளவிலான வெளிச்சத்தை தேடியிருக்கின்றனர் என்பதுதான் ஆச்சர்யம் என்கிறது ஆய்வு.

இருப்பினும் ஒரு cross-sectional ஆய்வு என்பதால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதால்தான் பிரச்னை உள்ளவர்கள் வெளிச்சத்தில் தூங்கவேண்டும் என்று தூண்டப்படுகிறார்களா அல்லது வெளிச்சத்தில் தூங்குவதுதான் இந்த பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறதா என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் தெளிவுக்கு வரவில்லை.

மேற்கூறிய பிரச்னை உள்ளவர்கள் வெளிச்சத்தில் தூங்கும்போது, இடையிடையே பாத்ரூமுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே லைட்டை அணைக்காமல் வைத்திருப்பவர்களும் உண்டு. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி கால் மரத்துப்போவதால் இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழாமல் இருக்கவும் விளக்கை அணைக்காமல் வைத்திருப்பவர்களும் உண்டு.

இருப்பினும் இரவு நேரங்களில் வெளிச்சத்தை தவிர்ப்பது மிகமிக முக்கியம். முடியாவிட்டால் வெளிச்சத்தின் அளவையாவது முடிந்தவரை குறைத்துக்கொள்ளலாம் என்கிறது ஓர் ஆய்வு. இயற்கை வெளிச்சம் - இருட்டு சுழற்சியை மட்டுமே பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறதா என்ற ஆய்வை மேற்கொண்டு வருகிறது ஜீ மற்றும் அதன் சார்பு குழுக்கள்.

வெளிச்சத்தை குறைப்பதற்கான வழிகள்:

இரவு நேரங்களில் லைட் போடவேண்டாம். வயதானவர்களுக்கு வெளிச்சம் தேவைப்பட்டால் மிகவும் மங்கலான தரையுடன் ஒட்டிய லைட்டை பயன்படுத்தலாம்.

நிறத்திற்கு முக்கியவத்துவம் கொடுங்கள். மஞ்சள், சிவப்பு / ஆரஞ்சு நிற லைட்டுகள் மூளையின் இயக்கத்தை சிறிதளவே தூண்டுகிறது. வெள்ளை அல்லது நீல நிற லைட்டுகளை தவிர்த்திடுங்கள். மேலும் லைட்டுகள் சற்று தூரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சிலருடைய வீடுகளில் ஜன்னல் வழியாக வெளிப்புற வெளிச்சம் வீட்டுக்குள் வரும். அதனை தவிர்க்கமுடியாத பட்சத்தில் கண் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். முடிந்தவரை அதிக வெளிச்சம் படாத இடத்தில் படுக்கையை அமைப்பது சிறந்தது.