இந்தியாவுக்காக 1928, 1932, 1936 என தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டில் தங்கம் வென்று கொடுத்தவர் தயான் சந்த்.
‘ஃபாதர் ஆப் இந்தியன் ஸ்போர்ட்ஸ்’ என பரவலாக அறியப்படுபவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே நம் நாட்டிற்காக புகழை தேடி கொடுத்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானுக்கு இன்று பிறந்த நாள்.
இதே நாளில் 1905-இல் அலகாபாத்தில் பிறந்தவர்.
அவரது அப்பா சாமேஸ்வர் சிங் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். பால்ய பருவத்தை வெவ்வேறு ஊர்களில் செலவிட்டுள்ளார் தயான் சந்த். அதற்கு காரணம் அவரது அப்பாவுக்கு அடிக்கடி பணியிடத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது தான்.
படிப்பை முடித்ததும் 1922 இல் ராணுவத்தல் சிப்பாயாக சேர்ந்தார் தயான் சந்த். அதன் பிறகே ஹாக்கி விளையாட்டில் முழு நேர கவனம் செலுத்தியதாக அவரே தெரிவித்துள்ளார். பால்ய பருவத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.
அவருக்கு புரொபெஷனல் ஹாக்கி ராணுவத்தில் சேர்ந்த பிறகே பரிச்சயமாகி இருந்தாலும் ஹாக்கி அவரது ஜீனிலேயே இரண்டற கலந்தது எனவும் சொல்லலாம். தயான் சந்தின் அப்பா சோமேஸ்வர் சிங்கும் இந்திய ராணுவத்திற்காக ஹாக்கி விளையாடியுள்ளார்.
1922 முதல் 1926 முதல் ஆக்டிவாக ஹாக்கி விளையாடினார் தயான் சந்த். குறிப்பாக உள்ளூர் போட்டிகளில் பந்தை கோல் போடும் வித்தையில் கெட்டிக்காரராக விளங்கினார் சந்த்.
அவரது இயற்பெயர் தயான் சிங். பணி சூழல் காரணமாக இரவு நேரங்களில் நிலவு வெளிச்சத்தில் தான் எப்போதும் பயிற்சி செய்வாராம். அன்றைய காலகத்தில் மைதானங்களில் ஒளிரும் விளக்குகள் இல்லாதது அதற்கு காரணம். அதனால் நிலவு வெளிச்சத்தில் பயிற்சி செய்யும் அவரை ‘சந்த்’ (இந்தியில் நிலா என்று பொருள்) என செல்லமாக அழைத்துள்ளனர்.
1926க்கு பின்னர் வெளிநாடுகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை தேடி கொடுத்தார் சந்த்.
1928 இல் ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லீக், அறையுறுதி மற்றும் இறுதி போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்றது இந்தியா. சந்த் ஐந்து போட்டிகளில் 14 கோல்களை அடித்திருந்தார். அதில் இறுதி போட்டியின் போது உடல்நிலை சரியில்லாத போதும் விளையாடி இரண்டு கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.
அந்த போட்டிக்கு பிறகு அவரை ஹாக்கி விளையாட்டின் மாயக்காரன் எனவே எல்லோரும் அழைத்தனர். தொடர்ந்து 1932 மற்றும் 1936 ஒலிம்பிக் போட்டிகளின் ஹாக்கி விளையாட்டிலும் இந்தியா தங்கம் வென்றது.
இந்தியாவுக்காக 1949 வரை விளையாடிய சந்த் 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்துள்ளார். சென்டர் பார்வேர்ட் பொசிஷனில் அவர் பந்தை கடத்தி சென்று கோல் போடுவதில் வல்லவர். அவரது காலத்தில் லைவ் பிராட்காஸ்ட் வசதி இல்லாத போதே இந்தியாவில் ஹாக்கி பக்கமாக பலரது பார்வையையும், ஆர்வத்தையும் எழுப்பியவர் சந்த். அவரது ஆதிக்கம் இன்றும் ஹாக்கி உலகில் அழுத்தமாகவே பதியப்பட்டுள்ளது.
அவரது பிறந்த நாளை தேசிய விளையாட்டு நாளாகவும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக ஜான்சியில் சிலையும் அவருக்கு நிறுவப்பட்டுள்ளது.