தாராவி, மும்பை ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் மும்பை தாராவி, 613 ஹெக்டேர் பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கும் தாராவியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி, முதல் தொற்று கண்டறியப்பட்டபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மக்கள் நெருக்கம் மிகுந்த தாராவியில் காட்டுத்தீ போல கொரோனா பரவுமோ என்று அச்சம் எழுந்தது.
இதற்கேற்ப ஏப்ரல் இறுதிக்குள் 491 பேருக்கு தொற்று உறுதியானது. 18 நாட்களுக்கு ஒருமுறை எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. மே மாதத்தில் தாராவியில் 56 பேர் இறந்திருந்தனர். ஆயிரத்து 216 பேர் தொற்றுக்குள்ளாகி இருந்தனர். ஆனால் இப்போதோ, அங்கு உயிரிழப்பு பூஜ்யமாகி இருக்கிறது. தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால இடைவெளி மே மாதம் 43 நாட்களாகவும், ஜூனில் 78 நாட்களாகவும் நீண்டிருக்கிறது.
மும்பையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தாராவியில் தற்போது வரை சுமார் 80 இறப்புகளே பதிவாகி உள்ளன. எப்படி சாதித்தது தாராவி? என்ற கேள்விக்கு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
மகாராஷ்ட்ரா அரசும் பிரஹான் மும்பை நகராட்சியும் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இங்கு கொரோனா தடுப்புக்கு 4 டி மாடல் பின்பற்றப்படுகிறது. டிரேசிங், அதாவது தொற்றை கண்டறிதல், ட்ராக்கிங், தொற்றுக்குள்ளானவர்களை தொடர்வது, டெஸ்டிங், பரிசோதனை மேற்கொள்வது, ட்ரீட்டிங், சிகிச்சை அளிப்பது என்ற இந்த 4 முறைகளை பின்பற்றி தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது.
வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்வது, முதியோர், ஏற்கனவே நோய் உள்ளவர்களை பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளால் முன்கூட்டியே பாதிப்பு கண்டறியப்பட்டு பரவல் தடுக்கப்பட்டு வருகிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஏசிம்டமேடிக் மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அருகாமையில் உள்ள பூங்காக்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களும் கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளன.
நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, மக்களுக்கு தேவையானவை வீடுதேடி வந்து சேரும் நடவடிக்கை, வீட்டுக்கு வீடு நடத்தப்படும் ஆய்வுகள் போன்றவை ஆரம்ப நிலையிலேயே தொற்றை கண்டறிந்து தடுப்பதால் தாராவியின் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைத்து வியப்பை ஏற்படுத்தி வருகிறது.