தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னம் pt web
இந்தியா

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ‘பாரத்’ பெயரும் இந்துக்கடவுளும்...! வலுக்கும் எதிர்ப்புகள்

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்படுள்ள புதிய மாற்றங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மூவர்ணக்கொடியின் நிறத்தோடு பாரத் என்ற பெயரும் சின்னத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. சின்னத்தில் செய்யப்பட்டள்ள மாற்றத்தில் ஒரு மதத்தின் சார்பு இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கனவே இருந்ததாகவும் தற்போது அதற்கு வண்ணம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பெயர் இடம்பெற்றதிலும் எந்த தவறும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் பழைய சின்னம்

ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சகம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் என பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் பி.என்.கங்காதர் இது குறித்து கூறுகையில், “குறிப்பிடத்தக்க வகையில் ஏதும் மாற்றப்படவில்லை என்பதால் இங்கு பரபரப்பானது ஏதும் இல்லை.

கருப்பு வெள்ளையில் வரி வரைபட வடிவில் தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கனவே லோகோவில் இருந்தது. தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்ட போது லோகோவில் தன்வந்திரியின் புகைப்படத்தை சின்னத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. சில நாடுகளில் அப்பலோ குணப்படுத்தும் கடவுள். இந்தியாவில் ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்தும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளப்பிரிவு தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது. “அறிவியல் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய அமைப்பு தனது சின்னத்தில் மதச்சின்னங்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது. நவீன விஞ்ஞான சமூகத்தால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என இந்திய மருத்துவ சங்கத்தின் கேரளப்பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய சின்னம்

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுள் தன்வந்திரியின் புகைப்படம் இணைக்கப்பட்டதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய மருத்துவ ஆணையத்தின் லட்சிணையில் இருந்த அசோக சக்கரம் நீக்கப்பட்டு இந்து கடவுள் தன்வந்திரி படம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆணையம் தன்வந்திரி நிலையமாக முடியாது. நவீன மருத்துவத்தை மறுதலிக்க முனைவது அறிவியலோடு விளையாடுவது மட்டுமல்ல. மக்களின் உயிரோடு விளையாடுவது” என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன், ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திராக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. டேக்லைனாக ஆரோக்ய பிரணாம் தனம் என சேர்க்கப்பட்டிருந்ததும் விவாதத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.