இந்தியா

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல்

Sinekadhara

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DGCI) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே பிரதமர் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால தேவைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது. கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசி இது. ஏற்கெனவே 55 நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவும் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.

ஏற்கெனவே இந்த தடுப்பூசிகளை இந்தியாவைச் சேர்ந்த டாக்டர். ரெட்டிஸ் நிறுவனம் இறக்குமதி செய்து சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்றும், பின்விளைவுகள் எதுவும் இருக்காது என்றும், அதேசமயத்தில் கொரோனா வைரஸிடமிருந்து தக்க பாதுகாப்பு அளிக்கும் என்றும் சோதனையில் கண்டறியப்பட்டது.

சோதனையில் கிடைத்த புள்ளிவிவரங்களை வைத்து அவசரகால தேவைக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்ததன்பேரில், தற்போது இம்மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என புகார் எழுந்த நிலையில் மத்திய அரசு 3வது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.