ஏர் இந்தியா எக்ஸ்
இந்தியா

விமானங்கள் தாமதம்... பயணிகளுக்கு அசெளகரியம்.. ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ நோட்டீஸ்!

Prakash J

சமீபகாலமாக விமானத்தில் பயணம்செய்யும் பயணிகளுக்கு, அவ்விமானச் சேவைகளில் அதிருப்தி நிலவுவதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சர்வதேச விமானங்கள் புறப்படுவதில் தாமதம் மற்றும் பயணிகளை உரிய முறையில் கவனிக்கத் தவறியது ஆகிய காரணங்கள் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் (டிஜிசிஏ) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டது மட்டுமின்றி, விமானத்தில் போதுமான குளிரூட்டும் வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதுதொடர்பாக விளக்கம் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளை சரியான முறையில் கவனிப்பதில் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்றும், விமானங்கள் புறப்படுவதில் தாமதம், விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட சமயங்களில் பயணிகளுக்கு வழங்கவேண்டிய நிவாரணங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏர் இந்தியா நிறுவனம் முறையாக வழங்கவில்லை என்றும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: குழந்தையுடன் இயேசு கிறிஸ்து| ஹர்திக் பாண்டியா மனைவி நடாஷாவின் வைரலாகும் படம்.. ரசிகர்கள் கேள்வி?

இதுகுறித்து, ஏர் இந்தியா மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் அல்லது சாத்தியமான அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.

கடந்த மே 24-ஆம் தேதி மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற ஏஐ 179 விமானம் மற்றும் 30-ஆம் தேதி டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்குச் சென்ற ஏஐ183 விமானம் ஆகிய இரண்டு சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டது மட்டுமின்றி, அதில் போதுமான குளிரூட்டும் வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்த வீடியோக்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: Gpay, PhonePe-க்கு போட்டி.. அதானிக்கு முன்பாக களமிறங்கிய அம்பானி.. சலுகைகளுடன் Jio App தொடக்கம்!