உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் சர்வதேச வர்த்தக விமானங்களுக்கான தடையை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது விமானபோக்குவரத்து ஆணையம்.
விமானப்போக்குவரத்து இயக்குநரகம், சர்வதேச வர்த்தக விமானங்கள் இயக்கத்தை நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் சர்வதேச விமானங்களுக்கான தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டது, இந்த தடை இப்போது மீண்டும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விமானப்போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்த சர்வதேச அனைத்து சரக்கு மற்றும் சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் உள்ள கொரோனா வழக்குகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நாடுகளின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் அனுமதிக்கப்படலாம் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா 18 நாடுகளுடன் விமான பயணத்துக்கான திட்டமிட்ட ஏற்பாட்டை செய்துள்ளது. இவற்றின் கீழ், அந்த 18 நாடுகளிலிருந்தும் விமான நிறுவனங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை இந்தியாவுக்கு இயக்க அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல், இந்த 18 நாடுகளில் உள்ள நகரங்களுக்கு விமானங்களை இயக்கவும் இந்திய விமான நிறுவனங்களுக்கு உரிமை உண்டு. இவை தவிர, பல நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் விமானங்கள் வந்தே பாரத் மிஷனின் கீழ் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 27 நிலவரப்படி, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் இத்திட்டம் மூலமாக வீடு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் மற்றொரு அலை உருவாகும் பட்சத்தில் சர்வதேச பயணம் குறித்த புதிய கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இந்த வைரஸ் எவ்வாறு செயல்படும் என்று நிபுணர்களுக்குத் தெரியாத நிலையில், தற்போது பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.