புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஞாயிறன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் விர்ச்சுவல் க்யூ மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் விர்ச்சுவல் க்யூ மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. அதோடு தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் "ஸ்பாட் புக்கிங்" மையங்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினசரி 5000 பக்தர்கள் என தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் சராசரியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சபரிமலையில் தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை சராசரியாக 40 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் ஞாயிறு விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் சன்னிதானத்தில் அதிகரித்திருந்தது. பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் பக்தர்கள் நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாதம் வாங்கும் கவுண்டர்களும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்திருப்பதை தொடர்ந்து அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.