மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மும்பையில் வீடு தேடி வருகிறார்.
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நாக்பூரைச் சேர்ந்தவர். நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற பின் மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள மலபார் ஹில்லில் முதலமைச்சர் பங்களாவான ’வர்சா’வில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா அரசியலில் நடந்த அதிரடி மாற்றங்களை அடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஃபட்னாவிஸ், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் முதலமைச்சர் பங்களாவை காலி செய்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக அவரது குடும்பத்தினரும் மும்பையிலேயே தங்கிவிட்டதால், தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். அவருக்காக மும்பையில் பங்களா தேடி வருகின்றனர்.
ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா, ஆக்சிஸ் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். மகள் படித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.