சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தர முயற்சிக்கும் பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய்க்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது என்று கேரள தேவஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு மும்பையில் இருந்து வந்து சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணிய செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் பக்தர்கள் போராட்டம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டார். இப்போது இந்தாண்டும் அதே திருப்தி தேசாய், சபரிமலை கோயில் செல்வதற்காக மும்பையில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர் " இன்று அரசியலைப்பு நாள். இந்நாளில் சபரிமலை செல்ல அனுமதி மறுக்கப்பட்டால், நிச்சயம் நீதிமன்றம் செல்வேன். அதற்கு கேரள முதல்வரும், பாதுகாப்பு தர மறுத்த டிஜிபியும் பதிலளிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெபிவித்துள்ள கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் " திருப்தி தேசாயும் அவரது குழுவினரும் சபரிமலை செல்வதற்காக கொச்சி வந்திருப்பதின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது. திருப்தி தேசாய் பூனேவில் இருந்து வந்துள்ளார். அவ்விடங்களில்தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. திருப்தி தேசாய் குழுவினர் காலை 5 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்துள்ளனர்" என கூறியுள்ளார்.