முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலில் இவர் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டுள்ளார். ஏற்கனவே ஹசன் தொகுதியின் சிட்டிங் எம்பியாக பிரஜ்வல் செயல்படுகிறார்.
இந்நிலையில் பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது போன்ற ஒரு வீடியோவும் புகைப்படங்களும் பரவிய நிலையில் அது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதிய நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவும் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார் என்று என்டிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், தனது புகழைக் கெடுக்கும் மற்றும் வாக்காளர்கள் மனத்தில் விஷத்தை பரப்பும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரபரப்படுவதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் பிரஜ்வலுக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்கென்றே போலியான வீடியோவை காங்கிரசார் பரப்பி வருவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர். அதேசமயத்தில் பாஜக இந்த விவகாரத்தில் இருந்து சற்றே விலகியே உள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், “பிரஜ்வல் தொடர்பான வழக்கில் மாநில அரசு எஸ்ஐடி விசாரணை அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து நாங்கள் எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூருவிலிருந்து ஜெர்மனிக்கு புறப்பட்டுச்சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.