செய்தியாளர்: ராஜிவ்
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் போராடி வருகிறது. ஹரியானாவில் முதல்வர் நவாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதைத் தவிர ஆம் ஆத்மி , ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. ஹரியானாவில் I.N.D.I.A. கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, தங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், ஐந்து தொகுதிகள் மட்டுமே ஒதுக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறது. இதன் மூலம் I.N.D.I.A. கூட்டணி முடிவுக்கு வந்ததாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பாஜக காங்கிரஸ் ஏற்கனவே தங்களின் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த, விவசாயிகள் போராட்டம் , மல்யுத்த வீரர்கள் போராட்டம் ஆகியவற்றை கையில் எடுத்து தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது காங்கிரஸ். இதனை தேர்தலில் சாதகமாக பயன்படுத்தும் வகையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டுக்கு ஜிலோனா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
மல்யுத்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விவசாயிகளையும் விவசாயிகள் அதிகம் உள்ள தொகுதிகளில் விவசாயம் சார்ந்த ஒருவரையும் வேட்பாளராக நிறுத்துவதன் மூலமும் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கு வழிவகுக்கும் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மல்யுத்தத்தில் தன்னை வெற்றிபெற செய்த ஹரியானா மக்கள் அரசியலிலும் வெற்றி பெற செய்வார்கள் என வினேஷ் போகட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனையாக பல வெற்றிகளை பதித்துள்ள வினேஷ் போகட் அரசியலில் வெற்றி பெறுவாரா ?
ஜிலோனா மக்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்குமா? விவசாயிகளுக்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டும் காங்கிரஸின் வாக்குறுதிகள் ஹரியானாவில் செல்லுபடி ஆகுமா? என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 8ஆம் தேதி தெரியவரும்.