காலிப்பணியிடங்கள் புதிய தலைமுறை
இந்தியா

மத்திய அரசுத்துறைகளில் இத்தனை லட்சம் காலிப்பணியிடங்களா?

மத்தியில் 3ஆம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு வேலைவாய்ப்பை உருவாக்குவதுதான் முக்கிய குறிக்கோள் எனத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், எவ்வளவு மத்திய அரசுப் பணிகள் காலியாக உள்ளன? அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: கௌசல்யா

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்த பணியிடங்கள் சுமார் 40,35,000 என்ற நிலையில், அதில் 30,55,000 பேர் பணியாற்றி வருவதாக 2023ஆம் ஆண்டு மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது அளிக்கப்பட்ட ஒரு பதிலில், பல்வேறு துறைகளில் 9,079 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரயில்வே துறையில் மட்டுமே சுமார் 2,50,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரயில்வேயில் பாதுகாப்பு பணியில் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

காலிப் பணியிடங்களை நிரப்பாததும், ரயில் விபத்துகள் நிகழ காரணம் எனக் கூறுகிறார் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் துரை பாண்டியன். இவை மட்டுமல்ல, தபால் துறை, பாதுகாப்புத்துறை, உள்துறையிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே அரசு எந்திரம் சரிவர செயல்பட முடியும் எனக் கூறும் துரை பாண்டியன், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப யோசனையையும் தெரிவித்துள்ளார். இவை ஒருபுறமிருக்க, மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப்படை, பொதுத்துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேரை நியமனம் செய்யும் திட்டத்தை கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் தொடங்கி வைத்தார்.

அதன் ஒருபகுதியாக, மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு சென்ற பிப்ரவரி மாதம் பிரதமர் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர், “வேலையில்லா திண்டாட்டம் எனக் கூறி வருவது பொய்யானத் தகவல். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் 8 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் வெளியிட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.

‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வருவாயை ஈட்ட தேவையான சூழலை உருவாக்கினால் தனிப்பட்ட ஒவ்வொருவரின் அடிப்படை தேவையும் பூர்த்தி அடைவதோடு, அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் சூழல் ஏற்படும். அப்போது, அரசு நினைக்கும் வளர்ச்சி இலக்கு தானாகவே நிறைவேறும். எனவே அரசு விரைந்து காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்’ சமூக செயற்பாட்டாளர்கள்.