இடைத்தேர்தல் முகநூல்
இந்தியா

7 மாநிலங்கள் 13 சட்டப்பேரவை தொகுதிகள்; நாடு முழுவதும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாவது எங்கெங்கே?

நாடெங்கும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் அந்த 13 தொகுதிகள் என்னென்ன?...அவற்றில் பிரதானமாக மோதும் கட்சிகள் எவை என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

PT WEB

நாடெங்கும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் அந்த 13 தொகுதிகள் என்னென்ன?...அவற்றில் பிரதானமாக மோதும் கட்சிகள் எவை என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ராய்கஞ்ச், ரணாகத் தக்ஷிண், பக்தா, மணிக்தலா ஆகிய 4 தொகுதிகளிலுமே ஆளும் திரிணமூல் காங்கிரசுக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவியது. அடுத்ததாக, இமாசல பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமிர்பூர், நலாகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது.

இமாசலத்தின் அண்டை மாநிலமான உத்தராகண்ட்டில் பத்ரிநாத், மங்கலார் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் பத்ரிநாத்திலும் மங்கலாரிலும் காங்கிரஸ் பாஜக இடையிலும் போட்டி நிலவியது. எனினும், மங்கலார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும் கடும் சவாலை தந்துள்ளது. இவை தவிர பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம்ஆத்மி - காங்கிரஸ் பலப்பரீட்சை நடத்தின. பீகாரின் ருபாலி தொகுதியில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே கடுமையான போட்டி நிலவியது.

மத்திய பிரதேசத்தின் அமர்வாராவில் பாஜகவும் காங்கிரசும் போட்டியிட்டன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாத நிலையில் திமுக, பாமக ஆகிய கட்சிகள் பிரதானமாக களத்தில் இருந்தன. இடைத்தேர்தல் நடக்கும் பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே பிரதான போட்டி இருந்தது. மற்ற 12 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சிகள் இடையேதான் போட்டி நிலவியது