உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
இந்தியா

துணை முதலமைச்சர் | அரசியல் சாசன பதவியா? அரசியல் ரீதியான பதவியா? நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் 3வது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவி குறித்து அரசியலைப்பு ரீதியாகவும், நீதிமன்றங்கள் கூறியிருப்பது குறித்தும் தற்போது காணலாம்..

PT WEB

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் பதவி இடம்பெற்றிருந்தாலும், துணை பிரதமர், துணை முதலமைச்சர் பதவி குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்திய அரசியலில் நீண்ட காலமாக இந்த பதவிகள் ஒரு அங்கமாக இருந்து வருகின்றன. இப்பதவிகள், நீதிமன்ற வழக்குகளுக்கும் வழிவகுத்துள்ளன.

1989 ஆம் ஆண்டு, வி.பி. சிங் அரசாங்கத்தில் தேவி லால் துணை பிரதமராக பதவியேற்றதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், தேவி லால் அமைச்சர்களில் ஒருவராகவே பதவியேற்றுக்கொண்டதை சுட்டிக்காட்டியது. துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதால், அவருக்கு பிரதமருக்கு உரிய அதிகாரங்கள் எதுவும் இருக்காது எனவும் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், ஓ. பன்னீர் செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வராக நியமிக்கும் முதல்வரின் முன்மொழிவை ஆளுநர் ஒப்புக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியது. அதில், ஓ. பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக பதவி பிரமாணம் ஏற்கவில்லை எனவும், ஒருவேளை அவர் துணை முதலமைச்சராகவே பதவி பிரமாணம் ஏற்றிருந்தாலும், அவருக்கு முதலமைச்சரின் அதிகாரங்கள் இருக்காது எனவும் கூறியது.

உதயநிதி ஸ்டாலின்

இதனிடையே துணை முதலமைச்சர் பதவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், அமைச்சராக இருப்பவரே துணை முதலமைச்சர் பதவியை வகிக்கிறார் என கூறிய உச்சநீதிமன்றம், அப்பதவி அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என தெரிவித்தது. அதேவேளையில் துணை முதலமைச்சராக இருப்பவர், சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டது.

துணை முதலமைச்சர் பதவி என்பது தனிப்பட்ட அதிகாரங்களை கொண்ட பதவியாகவோ, அரசியல் சாசன பதவியாகவோ அல்லாமல், அரசியல் ரீதியான பதவியாகவே தொடர்ந்து வருகிறது....