காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - புயல் புதிய தலைமுறை
இந்தியா

வங்கக்கடலில்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - இன்றிரவு புயலாக வலுப்பெறும்; எந்த மாநிலங்களில் பாதிப்பு?

PT WEB

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்றிரவு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்றிரவு வலுப்பெற்று, நாளை நள்ளிரவு தீவிரப்புயலாக வங்கதேசம் மற்றும் மேற்குவங்க கடற்கரையை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் -3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே, தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதிகளான சிவன் கோவில் பகுதி, ஸ்டேட் பேங்க் காலனி, மட்டக்கடை, இரண்டாம் கேட் பகுதி, பிரையண்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

இந்த புயலுக்கு ரெமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக மே 26-27 தேதிகளில் மேற்குவங்கத்தில் பல மாவட்டங்கள் மற்றும் ஒடிசாவில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.