இந்தியா

ஹனுமனை முஸ்லிம் என்பதா? பாஜக எம்.எல்.சி மன்னிப்புக் கேட்க மதராஸா வலியுறுத்தல்!

webteam

ஹனுமன் முஸ்லிம் என்று கருத்துத் தெரிவித்த, உத்தரபிரதேச பாஜக எம்எல்சி, புக்கல் நவாப் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில தியோபந்த் மதரஸா (Darul Uloom Deoband) வலியுறுத்தி உள்ளது.

ஹனுமன் என்ன சாதி என்பது குறித்து பலர் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐந்து மாநில தேர்தலின் போது, ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஹனுமன் ஒரு வனவாசி, அவர் ஒரு தலித் என தெரிவித்திருந்தார். இந்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேசிய பழங்குடியின தலைவர் நந்தகிஷோர் சாய், ஹனுமன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று பரபரப்பை கிளப்பினார். அவர் ஜாட் இனத்தைச் சேர்ந்த வர் என்று அம்மாநில அமைச்சர் லஷ்மி நாராயண் சவுத்ரியும் சொல்ல, ஹனு மன் விவகாரம் பரபரப்பானது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக கவுன்சிலரான புக்கல் நவாப், ஹனுமன், முஸ்லிம் என கூறினார். ரஹ் மான், புர்கான் போன்ற முஸ்லிம் பெயர்களின் உச்சரிப்பு ஹனுமன் பெயரிலும் இருப்பதால் அவர் முஸ்லிம் என்றார். இது அடுத்த சர்ச்சையானது.

இந்நிலையில், இப்படி கூறியதற்கு உத்தரபிரதேச பாஜக எம்எல்சி புக்கல் நவாப், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரப் பிர தேசத்தில் உள்ள தியோபந்த் மதராஸா வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மதரஸாவின் ஃபத்வா பிரிவு தலைவரான முப்தி அர்ஷத் அகமது பரூக்கீ கூறும்போது, ‘’மதங்கள் பற்றி அதற்கானப் பொறுப்புகள் கொண்டவர்கள் மட்டுமே பேச வேண்டும். அவர்கள் பிரச்னையை தீவிரமாக ஆலோசித்த பின்பே கருத்துக்களை கூறவேண்டும். ஹனுமரை, முஸ்லிம் எனக் கூறியமைக்கு புக்கல் நவாப், இந்து மற்றும் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனவும் வலியுறுத்தி உள்ளார்.