இந்தியா

டெல்லி: தொடரும் அடர்ந்த பனிமூட்டம்... குறைந்த பார்வை திறனால் விமானங்கள், ரயில்கள் தாமதம்!

டெல்லி: தொடரும் அடர்ந்த பனிமூட்டம்... குறைந்த பார்வை திறனால் விமானங்கள், ரயில்கள் தாமதம்!

webteam

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பொது போக்குவரத்து பாதித்துள்ளது. கடுமையான குளிர் நிலவிவந்த சூழ்நிலை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்று டெல்லியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக 10 விமானங்கள் தாமதமாகியுள்ளது; 26 ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

மூடுபனி காரணமாக கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இன்று அதிகாலை முதல் டெல்லியில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், குறைந்த பார்வைத் திறன் காரணமாக 10 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் அடர்ந்த மூடுபனி காரணமாக தாமதமாகியுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி-சிம்லா, டெல்லி-காத்மாண்டு, டெல்லி-சென்னை, டெல்லி-ஜெய்சால்மர், டெல்லி-பரேலி, டெல்லி-மும்பை, டெல்லி-வாரணாசி, டெல்லி-ஸ்ரீநகர், டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி-கௌஹாத்தி ஆகிய விமானப் பாதைகள் கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று சஃப்தர்ஜங் பகுதியில்  குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பாலம் பகுதியில்  100 மீட்டர் தொலைவில் தெரிவுநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிக்கப்பட்டபடி பஞ்சாப், வடமேற்கு ராஜஸ்தான், ஜம்மு பிரிவு, ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் திரிபுரா ஆகிய பகுதிகளில் அடர்ந்த மற்றும் மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது.

மறுபுறம் பனிமூட்டம் காரணமாக 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இத்துடன் காற்றிந்தர குறியீடு 421 என்ற புள்ளிகளுடன்  'கடுமையான' நிலையில் நீடிக்கிறது