இந்தியா

“கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” - தற்கொலை செய்த யுபிஎஸ்சி தேர்வாளர் உருக்கமான கடிதம்

“கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம்” - தற்கொலை செய்த யுபிஎஸ்சி தேர்வாளர் உருக்கமான கடிதம்

rajakannan

தாமதமாக வந்ததால் யுபிஎஸ்சி தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த வருண் (28) என்ற அந்த மாணவர் தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு முழு மூச்சோடு யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதி வருகின்றனர். யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தான் நிறைய உள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லிக்கு சென்று தங்கி அங்குள்ள பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். அப்படிதான் கர்நாடகாவைச் சேர்ந்த வருண் என்பவர் ராஜேந்திர நகர் என்ற பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தேர்வுக்கு பயின்று வந்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் வருண் டெல்லியில் உள்ள பகர்கன்ச் என்ற பகுதியில் தேர்வு எழுத சென்றுள்ளார். தேர்வு அறைக்கு தாமதமாக சென்றதால் வருண் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுத முடியாததால் மனமுடைந்த வருண் தன்னுடைய அறைக்கு வந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வருண் இறந்த தகவலை முதலில் அவரது பெண் தோழிதான் போலீசிடம் கூறியுள்ளார். தேர்வு எழுதிய பின்னர் வருணுக்கு தோழி போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. நாள் முழுவதும் போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் வருணின் அறைக்கு சென்றுள்ளார். அவர் கதவை திறக்கவேயில்லை. ஜன்னல் வழியாக பார்த்த அவர், வருண் தூக்கில் தொங்கிக் கொண்டிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து போலீசிடம் அந்தப் பெண் தோழி தகவல் தெரிவித்துள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வருண் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “உங்களுடைய விதிமுறைகள் எல்லாம் நன்றாகதான் உள்ளது. ஆனால், கொஞ்சம் கருணைக் காட்டியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். காலை 9.30, மதியம் 2.30 மணிக்கு தேர்வுகள் நடைபெறும். யுபிஎஸ்சி விதிமுறைப்படி தேர்வு அறைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வரவேண்டும். அதாவது 9.20, 2.20 மணிக்கெல்லாம் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும்.