பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இந்த நடவடிக்கையால் மக்கள் கடும் சிரமத்துள்ளாகி இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும், இதுகுறித்து விளக்கமளிக்குமாறு 10 கேள்விகளை எழுப்பி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற பொதுகணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநரின் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் பிரதமர் மோடிக்கு சம்மன் அனுப்பவும் பொதுகணக்குக் குழு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், பணமதிப்பிழப்பு விவகாரத்தை முன்னெடுத்து அதற்கான ஒப்புதல் வேண்டி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு கடந்த நவம்பர் 7ம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு அடுத்த நாளான நவம்பர் 8ம் தேதி ஆர்பிஐ ஒப்புதல் அளித்ததாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான குழுவிடம் ஆர்பிஐ சார்பில் கடந்த டிசம்பர் 22ம் தேதி அளிக்கப்பட்ட ஏழு பக்க விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கும் பட்சத்தில், மத்திய அரசு தங்களிடம் கேட்டதால் தாங்கள் ஒப்புக் கொண்டோம் என விளக்கம் அளித்தால், அது மோடிக்கு சங்கடத்தையே ஏற்படுத்தும்.மோடியிடம் பொதுக்கணக்குக் குழு விளக்கம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்.