haryana building demolition pt web
இந்தியா

”இனஅழிப்பு வேலையை செய்றீங்களா?”-வீடுகள் இடிப்பு குறித்து ஹரியானா அரசுக்கு கேள்விகளை அடுக்கிய ஐகோர்ட்

ஹரியானாவில் நிகழ்ந்த கலவரத்தை அடுத்து வீடுகள் கட்டடங்கள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Angeshwar G

மணிப்பூர் கலவரம் நாட்டையே உலுக்கிய நிலையில் ஹரியானாவிலும் கலவரங்கள் சமீப நாட்களில் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. நூஹ் மாவட்டத்தில் ஜூலை 31 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் நடத்திய பிரஜ் மண்டல் யாத்ரா ஊர்வலம் கலவரமாக மாறியது. இதில் இமாம், 2 ஊர்க்காவல் படையினர், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

வன்முறைக்கான தூண்டுகோலாக அமைந்தது குறித்து காவல்துறையினர் கூறுகையில் பஜ்ரங் தள் உறுப்பினரும் பசுக் காவலருமான மோனு மனேசர் கலந்து கொள்வார் என்றும் அது குறித்து பரவிய காணொளிகளுமே கலவரத்திற்கான தூண்டுகோலாக அமைந்தது என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை அடுத்தடுத்த நாட்களில் அருகில் இருந்த மாவட்டங்களுக்கும் பரவிய நிலையில், ஹரியானா மாநிலத்தில் மகேந்திரகர், ஜஜ்ஜார், ரேவாரி என 3 மாவட்டங்களில் உள்ள 14 கிராம பஞ்சாயத்துகள் (மகா பஞ்சாயத்துக்கள் - அரசு சார்ந்தது அல்ல) தாங்கள் முஸ்லீம் சமூக உறுப்பினர்களை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இஸ்லாமிய சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு வீடுகள் மற்றும் கடைகளை வாடகைக்கு விடக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் வியாபாரம் செய்ய வருபவர்களையும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்த பின்பே அனுமதிக்கின்றனர்.

குருகிராமின் டிக்ரி பகுதியில் நடந்த மகாபஞ்சாயத்தில் 200 கிராமங்களைச் சேர்ந்த 700 பேர் கலந்து கொண்டனர். இதில் உயிரிழந்த இமாம் முகமது சாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்துக்கள் வாழும் பகுதியில் நடத்தப்படும் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், கவலரங்கள் நடந்த சில தினங்களுக்கு பின் நூவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிக்கப்பட்ட சம்பவத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்தும் ஹரியானா உயர்நீதிமன்றம், எத்தனை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இடிப்பதற்கு முன் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டதா என்பது உள்ளிட்ட கேள்விகளை அரசிடம் எழுப்பியுள்ளது.

மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் விஜ், வகுப்புவாத வன்முறைகளை கட்டுப்படுத்துவதில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் புல்டோசர்கள் அதன் ஒரு பகுதி என கூறியிருந்ததும் சர்ச்சையானது. இதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் ஆங்கில எழுத்தாளர் லார்டு ஆக்டனின், “அதிகாரம் ஊழல் செய்ய தூண்டுகிறது, முழுமையான அதிகாரம் முற்றிலும் ஊழல் செய்கிறது” என்ற கூற்றை மேற்கோள் காட்டியுள்ளனர்.

வீடுகளை இடிப்பது தொடர்பாக எந்த ஒரு நோட்டீஸ் மற்றும் உத்தரவிகளையும் வழங்காமல் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி எவ்வித சட்ட வழிமுறைகளையும் பின்பற்றாமல் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் குர்மீட் சிங் மற்றும் ஹர்ப்ரீட் கவுர் அமர்வு கூறியுள்ளது.

மேலும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி குறிப்பிட்ட சமூக மக்களது வீடுகள் மட்டும் இடிக்கப்பட்டுள்ளதா என்றும் மாநிலத்தல் இனச்சுத்திகரிப்பு நடத்தப்படுகிறதா என்ற கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. இந்நிலையில் வீடுகளை இடிக்க தடை விதித்து துணை கமிஷ்னர் திரேந்திரா உத்தரவிட்டுள்ளார்.