இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங்: ஆர்டர் செய்தது மொபைல்; கிடைத்தது சோப்பு!

webteam

ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மொபைல் ஃபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டிகள் டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது இன்று பேஷனாகிவிட்டது. கடலைமிட்டாய் முதல் காய்கறி வரை அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்து வரவைக்க முடியும். கடையில் விற்கப்படும் பொருள்களை விட ஆன்லைனில் சலுகை விலையில் கிடைப்பதால் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஜிராக் தவான் என்பவர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பெயர்போன அமேசான் நிறுவனத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒன் பிளஸ் 5 ஸ்மார்ட்ஃபோனை ஆர்டர் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு 11 ஆம் தேதி டெலிவரி ஆனது. ஆர்டர் செய்தது ஸ்மார்ட்ஃபோன் ஆனால் டெலிவரி செய்த பேக்கிங்கில் இருந்தது சோப்பு கட்டிகள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜிராக், உடனே அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் கூறினார். ஆனால் அவர்கள் ஜிராக் பிரச்னையை தீர்க்க சரியான பதில் கூற மறுத்துள்ளனர். இதனை ஜிராக் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து தீயாய் பரவிய இந்த செய்தி ஃபேஸ்புக்கில் 3000 ஷேர்களை தாண்டியது. அதன்பின் இந்த புகாரை அறிந்த அமேசான் நிறுவனம் விரைவில் அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனை அனுப்பி வைப்பதாக உறுதிமொழி அளித்துள்ளது.