கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு உறவினரை மீட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிப் (21). டெல்லி யுனிவர்சிட்டியில் படித்துவரும் இவர் பகுதி நேரமாக வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த 23-ம் தேதி இவரது காரில் முகமது ரஃபீ, ஆகாஷ் என்ற இரண்டு பேர் ஏறினர். போபரா அருகே கார் போகும்போது, கத்தியை காட்டி காரை நிறுத்தக் கூறினர். ஆசிப் கையில் இருந்த பர்சை பிடுங்கிக் கொண்டனர். அதில் பணம் குறைவாக இருந்ததால், வீட்டுக்கு ஃபோன் செய்ய சொன்னார்கள். ஆசிப் ஃபோன் செய்தார். அதைப் பிடுங்கிய அவர்கள், ’உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். 25 ஆயிரம் ரூபாய் தந்தால் உயிரோடு விடுவோம். பணத்தோடு நாங்கள் சொல்லும் இடத்துக்கு வரவேண்டும்’ என்று மிரட்டினர்.
இதுதொடர்பாக ஆசிப் குடும்பம் போலீசில் புகார் செய்தது. ஆசிப்பின் அண்ணன் மனைவி ஆயிஷா (33). துப்பாக்கிச் சுடும் வீராங்கனை. தேசிய அளவில் பல பரிசுகள் வென்றவர். இந்நிலையில் கொள்ளையர்கள் சொன்ன இடத்துக்கு போலீசார் மஃப்டியில் செல்ல, ஆயிஷாவும் அவரது கணவரும் பணத்தோடு சென்றனர். ஆயிஷா கையில் .32 வகை பிஸ்டலை எடுத்துச் சென்றிருந்தார். பணத்தை கொடுக்க ஆயிஷா சென்றார். அப்போது, தான் வைத்திருந்த பிஸ்டலால், கடத்தல்காரர்களை குறி பார்த்துச் சுட்டார். இதில் ஒருவனின் தோளிலும் மற்றொருவனின் காலிலும் குண்டு பாய்ந்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். ஆயிஷாவிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையரை துப்பாக்கியால் சுட்டு கொழுந்தனை மீட்ட அயிஷாவுக்கு ஏராளமானோர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.