இந்தியா

டெல்லி வன்முறை: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு

டெல்லி வன்முறை: ஆம் ஆத்மி கவுன்சிலர் மீது கொலை வழக்குப் பதிவு

rajakannan

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹிர் ஹுசைன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு டில்லியில் நடந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளனர். வன்முறையில் படுகாயம் அடைந்த 50-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, டெல்லி வன்முறை தொடர்பாக ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியிருந்தனர். இதில், ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹிர் ஹுசைன் வன்முறையில் ஈடுபட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா பதிவிட்டிருந்தார். இதனை சுட்டிக்காட்டி இன்று பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹீர் ஹுசைன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வன்முறையில் தனக்கு தொடர்பு இல்லை என கூறியுள்ள அவர், மத்திய அமைச்சர் குறிப்பிடும் வீடியோ வன்முறைக்கு முந்தைய நாள் பதிவானது என விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹிர் ஹுசைன் மீது டெல்லி போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். கொலை வழக்குப் பிரிவில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் என்றாலும் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்த நிலையில், தஹிர் ஹுசைன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தஹிர் ஹுசைனை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.