சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு அபராதம் இருமடங்காக வசூல் செய்யப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
இந்தியாவில் நாள்தோறும் பலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதனால் வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, புதிய வாகன சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவந்தது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு அபராத கட்டணத்தை பல மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.
சமீபத்தில் அமலான புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி போலீசார் அபராதங்களை வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி டிஜிபி அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் காவலர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும்.
சாலை விதிகளை மீறும் காவலர்களுக்கு புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி உருவாக்கப்பட்ட அபராதத் தொகையை போல இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் என புதிய விதி தெரிவிக்கிறது. ஆனால் காவலர்களாக இருந்தால் அது ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கு வாகனம் ஓட்டும்போதும், அல்லது சொந்த வாகனங்களை ஓட்டும் போதும் சாலை விதிகளை கடைபிடிப்பது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.