இறந்த மாணவர் Google
இந்தியா

டெல்லி: பிறந்தநாள் அன்று காதலி அழைத்ததாக சென்ற மாணவர் அடித்துக் கொலை... நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம் பாக்பத்தில் டெல்லி யூனிவர்சிட்டி மாணவர் ஒருவர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

Jayashree A

உத்தரப்பிரதேசம் பாக்பத்தில் டெல்லி யூனிவர்சிட்டி மாணவர் ஒருவர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்து கடத்திச்செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டார்.

மீரட் பகுதியில் உள்ள டெல்லி ஓபன் யூனிவர்ஸிட்டியில் BA இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் ஹிமன்ஷு சர்மா. வயது 20. இவர் தன்னுடன் படித்து வரும் ஒரு பெண்ணை விரும்பியதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமன்ஷு சர்மாவுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அன்று அவருக்கு தன் காதலி தொலைபேசியிலிருந்து ஒரு அழைப்பு வந்ததை அடுத்து அவர் காதலியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

ஹிமன்ஷு சர்மாவிற்கு ஒரு தங்கையும் உண்டு. ஹிமன்ஷுவின் அப்பா இறந்தபிறகு, அவரது அம்மா ரஜினி சர்மா டெல்லியின் நியூ உஸ்மான்பூரில் ஒரு சிறிய மளிகை கடையை நடத்திக்கொண்டு, குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று, தனது மகன் ஹிமன்ஷு நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், கவலையடைந்த ரஜினி, தனது மகனுக்கு போன் செய்து பார்த்திருக்கிறார், ஆனால் ஹிமன்ஷுவின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணிடம், ரஜினி, நடந்ததை கூறியுள்ளார். பக்கத்து வீட்டு பெண் அன்றிரவு சுமார் 10.30 மணியளவில் ஹிமன்ஷுவின் போனுக்கு மறுபடியும் கால் செய்துள்ளார். அப்போது போனை எடுத்துப் பேசிய, ஹிமன்ஷுவின் காதலி என்று சொல்லப்படும் சிறுமியின் உறவினர்கள், ஹிமன்ஷுவை கடத்தி பாக்பத்தில் உள்ள ஒரு காட்டிற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு அவரை கொலை செய்யப்போவதாகவும், உடனடியாக ரஜினியைக் கூட்டிக்கொண்டு சம்பவ இடத்திற்கு வருமாறும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர்.

உடனடியாக அந்தப் பெண், ரஜினியிடம் நடந்ததைக் கூறவும், இருவரும் பதற்றத்துடன் பாக்பத்திற்கு விரைந்துள்ளனர். ரஜினி சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுமியியின் உறவினர்கள் ஹிமன்ஷுவை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் இறந்துபோயிருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குற்றவாளிகள் என்று கருதிய இருவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில், சிறுமியின் தாயார், போலீசாரிடம், ”ஹிமன்ஷு என்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், எனது மகளையும் மிரட்டினான். ஆகவே அவனுக்கு பாடம் கற்பிப்பதற்காக கடத்தி வந்து அடித்தோம். ஆனால் எங்களின் அடியில் அவர் இறந்து விட்டார்” என்று கூறியதாக தெரிகிறது.

இதை மறுத்த ரஜினி, “எனது மகன் அப்படிப்பட்டவன் இல்லை. வேண்டுமென்று எனது மகன் மீது வீண் பழியை சுமத்துகிறார்கள். இப்படி ஒரு சம்பவம், அல்லது பிரச்னை நடந்திருந்தால் அவர்கள் ஏன் என்னிடம் இதுபற்றி முன்பே பேசவில்லை? அதற்காக எனது மகனை கடத்திக்கொண்டு போய் கொலை செய்ய வேண்டுமா? எங்களின் கனவுகள் முற்றிலும் சிதைந்துவிட்டது...” என்று கூறியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.