இந்தியா

பள்ளியிலும் பாகுபாடா..? மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..!

பள்ளியிலும் பாகுபாடா..? மதம் பார்த்து மாணவர்கள் பிரித்து வைப்பு..!

webteam

டெல்லியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மதம் பார்த்து மாணவர்களை பிரித்து வைப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி நகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி ஒன்று வஜிராபாத் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவ- மாணவிகளை மதம் பார்த்து பிரித்து வைப்பததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் விவரங்கள்

வகுப்பு IA-36 இந்துக்கள்
வகுப்பு 1B-36 முஸ்லிம்கள்
வகுப்பு IIA-47 இந்துக்கள்
வகுப்பு IIB-26 முஸ்லிம்கள்,15 இந்துக்கள் 
வகுப்பு IIC-40 முஸ்லிம்கள் 
வகுப்பு IIIA-40 இந்துக்கள்  
வகுப்பு IIIB-23 இந்துக்கள் 11 முஸ்லிம்கள்
வகுப்பு IIIC-40 முஸ்லிம்கள்
வகுப்பு IIID-14 இந்துக்கள்
வகுப்பு IVA-40 இந்துக்கள் 
வகுப்பு IVB-19 இந்துக்கள்,13 முஸ்லிம்கள்
வகுப்பு IVC-35 முஸ்லிம்கள்
வகுப்பு IVD-11 இந்துக்கள்,24 முஸ்லிம்கள்
வகுப்பு VA-45 இந்துக்கள்
வகுப்பு VB-49 இந்துக்கள்
வகுப்பு VC-39 முஸ்லிம்கள்,2 இந்துக்கள்
வகுப்பு VD-47 முஸ்லிம்கள்

கடந்த ஜூலை 2-ஆம் தேதி இப்பள்ளியின் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து பள்ளியின் பொறுப்பு ஆசிரியராக சிபி சிங் என்பவர் நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வழக்கமாக பள்ளிகளில் பிரிவுகள் பிரிக்கப்படும் முறையே இங்கேயும் பின்பற்றப்பட்டுள்ளது. இது பள்ளியின் நிர்வாகம் எடுத்த முடிவு. மாணவர்களின் நலன், அமைதி உள்ளிட்ட பல காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிலநேரம் சண்டை கூட போடுகின்றனர்” எனத் தெரிவித்தார். 

அதற்கு மதரீதியாகவா மாணவர்கள் சண்டை போடுகிறார்கள் எனக் கேட்டபோது, 
“ஆம். சிலநேரங்களில் அப்படிகூட நடைபெறுவதுண்டு. அவர்கள் குழந்தைகள்  அதனால் அப்படி சண்டையிடுகிறார்கள். சில குழந்தைகள் சைவம் உண்கிறார்கள். அனைத்து  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்தக் கல்வியாண்டு தொடங்கிய நிலையில் சிபி சிங் பள்ளியின் பொறுப்பு ஆசிரியராக பொறுப்பேற்ற ஜூலை மாதத்திற்கு பின்தான் இப்படி மதரீதியிலான பாகுபாடு காட்டப்பட்டு மாணவர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சக ஆசிரியர்கள் சிபி சிங்கிடம் முறையிட்ட போதும் கூட அதற்கு உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் பாருங்கள் என காட்டமாகவும், கொடூரமாகவும் அவர் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மத பாகுபாடின்றி நண்பர்களாக பழகி வந்த மாணவர்கள் தற்போது வேறுவேறு பிரிவில் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போதுதான் இந்தப் பிரச்னை எங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உன்னிப்பாக இவ்விஷயத்தில் விசாரணை நடத்துவோம். உண்மையாக இருக்கும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார். மாணவர்கள் ஜாதி மத பாகுபாடின்றி பழகும் இடம் பள்ளி. அங்கேயும் இப்படி பிரிக்கப்பட்டால் என்ன ஆகும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Courtesy: TheIndianExpress