இந்தியா

கொரோனா காலத்தில் நச்சு கலந்த காற்றால் டெல்லி வாசிகள் கவலை

webteam

டெல்லியில் ஆஸ்த்மா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நச்சுப் பொருட்கள் கலந்த காற்றை சுவாசிப்பதால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது கொரோனா பாதிப்பைவிட மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக டெல்லிவாசிகள் பதற்றத்துடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர்.

ஊரடங்கு நாட்களில் மாசுகளற்ற காற்றைச் சுவாசித்தவர்கள், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் நச்சு கலந்த காற்றை எதிர்கொண்டுவருகின்றனர். மேலும் டெல்லியைச் சுற்றியுள்ள விவசாயிகள், அறுவடை செய்த நிலங்களை எரியூட்டுவதால் பெரும் புகையும் காற்றில் சுற்றிச்சுழல்கிறது. அது குளிரான பருவநிலையையும் மாற்றிவருகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர் ரூபேஸ் குப்தா, வயது 45. ஆஸ்த்மா நோயாளியான அவர், சிகிச்சைக்குப் பிறகு மாசுபட்ட காற்றை சுவாசிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். "என்னால் நடக்கவோ, வீட்டை விட்டு வெளியே போகவோ முடியவில்லை. நான் வீட்டை விட்டு வெளியேறினால், சுவாசிப்பதற்கு ரொம்பவும் சிரமமாக இருக்கிறது" என்கிறார்.

தனது தாயை கொரோனாவுக்குப் பலிகொடுத்த அவருக்கு காற்று மாசு மீண்டும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் வீட்டில் எதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற பிரமையாக உள்ளது" என்கிறார் அவரது மனைவி நீலம் குப்தா. குடும்பத்தினரின் அவசரத் தேவைக்காக 15 கிலோ ஆக்சிஜன் சிலிண்டரை வாங்கி வைத்திருக்கிறார்கள்.