டெல்லியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாசுபாடு சோதனையில் மிகவும் மோசமான நிலை உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் மாசுபாடு குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வருட பனிக்காலத்தில் அதிகபட்ச மாசுபாட்டின் அளவு 381 ஏக்யூஐ (காற்றின் தரம்) ஆக உள்ளது என தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக மாசுபாடு கொண்ட நகரம் இதுதான் என்பதால், இங்கு காற்றின் தரம் குறித்து அவ்வப்போது மாசுக்கட்டு வாரியம் பரிசோதித்து வருகிறது.
தீபாவளி வரவுள்ள நிலையில், தற்போதைய மாசுபாடு குறித்து அறிவதற்காக டெல்லியின் 20 இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை ஆராய்ந்தது. இதில் அனைத்து இடங்களிலுமே மிக மோசமான காற்றுத்தரம் இருப்பது தெரியவந்துள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏக்யூஐ அளவிட்டின் படி காற்றின் தரம் என்பது, 0-50 ஆக இருந்தால் நல்ல நிலை. 51-100 ஆக இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடியது. 101-200 ஏக்யூஐ ஆக இருந்தால் மிதமானது. 201-300 என்பது மோசமானது. 301-400 மிக மோசமானது மற்றும் 401-500 என்பது கடுமையானது. இதில் கடுமையான நிலை என்பது வாழ்வதற்கே ஆபத்தான இடம் என கருதப்படுகிறது.
முன்னதாக தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை காற்றின் மாசுபாடு குறித்து அளவீடு செய்ய வேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லி மக்கள் புகை அதிக வெளியாகும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளி கொண்டாடுமாறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏனென்றால் தீபாவளி நேரத்தில் பனிப்பொழிவுடன் மாசுபாடு அதிகரித்தால், அங்கு ஏக்யூஐ அளவு 400ஐ தாண்டு என கணிக்கப்பட்டுள்ளது.