ஸ்மிருதி சிங் எக்ஸ் தளம்
இந்தியா

வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியை இழிவாகப் பேசிய நபர்... எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்த டெல்லி காவல்துறை!

Prakash J

இந்திய ராணுவத்தின் 26வது பஞ்சாப் படைப்பிரிவில் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு (2023) ஜூலை 19ஆம் தேதி, சியாச்சினில் பணியில் இருந்தபோது அங்கு இருந்த ஆயுதக் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. அதன் உள்ளே சிக்கிக்கொண்டவர்களை கேப்டன் சிங் உடனடியாக மீட்டார். ஆனால், தீவிபத்தில் சிக்கிக்கொண்ட மருத்துவ உபகரணங்களை எடுக்கச் சென்றபோது சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜூலை 22-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பாகல்பூரில் கேப்டன் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இவ்விருதை கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங்கிற்கு வழங்கினார்.

இதையும் படிக்க; ’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’- காதலருக்கு நம்பிக்கை கொடுத்த கவிஞன்..தொலைவுக்கு அப்பால் சென்ற ரவி ஷங்கர்!

சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பகிரப்பட்ட நிலையில், கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதில் டெல்லியைச் சேர்ந்த அகமது.கே என்ற நபர் ஒருவர், ஸ்மிருதியின் கைம்பெண் கோலத்தை வைத்து மிகவும் இழிவான முறையில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, அவருடைய கருத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் (NCW) கடும் கண்டனம் தெரிவித்தது. அவர்மீது டெல்லி காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அகமது கே-வை கைதுசெய்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியைச் சேர்ந்த அந்த நபரின் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உ.பி|காய்ச்சலால் உயிரிழந்த சகோதரி; ஆம்புலன்ஸ் இல்லாததால் உடலை சுமந்தே சென்ற சகோதரர்கள்! #viralvideo