யமுனை புதியதலைமுறை
இந்தியா

டெல்லி | நச்சுத்தன்மை கொண்ட நுரை.. மாசடைந்த யமுனை நதி.. ஆபத்தை உணராமல் சத் பூஜை கொண்டாடிய மக்கள்!

டெல்லி யமுனையில் மோசமான நிலை - ஆபத்தை உணராமல் நூற்றுக்கணக்கான மக்கள் சத் பூஜையில் ஈடுபட்டனர் 

PT WEB

செய்தியாளார் ராஜீவ்

தலைநகர் டெல்லியில் யமுனை நதி மாசடைந்து காணப்படுகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலையின் கழிவு நீர் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் போன்றவை யமுனை நதியில் கலப்பதன் காரணமாக, யமுனை நதி நச்சுத்தன்மை கொண்ட நுரையால் மூடப்பட்டுள்ளது. 

நுரையைக் கட்டுப்படுத்த ரசாயனம் தெளித்து அதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் நவம்பர் 5ஆம் தேதி முதல் 8-ம் தேதி வரை நதிக்கரைகளில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் சத் பூஜை கொண்டாடப்படும். குறிப்பாக நவம்பர் 7ஆம் தேதி (நேற்று) இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அந்தந்த நதிக்கரைகளில் சத்து பூஜை கொண்டாட்டம் களைகட்டியது.

டெல்லியை பொறுத்தவரை மாசடைந்துள்ள   யமுனை நதிக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதன் அபாயத்தை அறியாமல் சத் பூஜையில் ஈடுபட்டனர். இதனால் நச்சுத்தன்மை கொண்ட நுரை காரணமாக சுவாச பிரச்னை மற்றும் தோல் நோய் பிரச்சனைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி வழியாக 22 கிலோமீட்டர் பரப்பளவில் செல்லும் யமுனை, ஒவ்வொரு 1.2 கிலோமீட்டர் ஒரு வடிகால் என 18 வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

செயற்கைக்கோள் படங்கள் வசிராபாத் மற்றும் ஓக்லா இடையே இரண்டு பெரிய நுரை ஹாட்ஸ்பாட்களை வெளிப்படுத்துகின்றன. முதலாவது, டிஎன்டி மேம்பாலத்திற்கு அருகில் மற்றும் இரண்டாவது காளிந்தி குஞ்ச் பகுதியில் ஆண்டுதோறும் நச்சு நுரை எழுகிறது. இருப்பினும் பொதுமக்கள் இதன் அபாயத்தை அறியாமல் பண்டிகை காலங்களில் நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி யமுனை நதிக்கரையில் தினசரி அடிப்படையில் சோதனை மற்றும் கண்காணிப்பதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வல்லுநர்கள் நச்சுத்தன்மை கொண்ட நுறை மற்றும் நீரை ஆய்வுக்கு உட்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆண்டுதோறும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் டெல்லியில்  யமுனை நதிக்கரை மாசுபடுவது மற்றொரு மிகப்பெரிய சவாலாக மாநில அரசுக்கு இருக்கிறது.