இந்தியா

கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கமல் பேசியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

webteam

கமல் பேசியதற்கான முழுமையான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரவக்குறைச்சியில் பரப்புரையின்போது பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும் அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்திருந்தார். 

கமலின் இத்தகைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மதத்திற்கு எதிராக கமல் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கமல்ஹாசன் இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சையான கருத்தை முன் வைத்துள்ளார். இதனால் நாட்டில் மத கலவரங்கள் உண்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுங்கள் என வாதாடினார். 

இதைகேட்ட நீதிபதிகள் ஏன் இந்த விஷயத்தில் நீங்கள் தலையிடுகிறீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த மனுதாரர், நான் ஒரு இந்து. என் மதத்திற்கு எதிராக ஒருவர் பேசும்போது தார்மீக அடிப்படையில் இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த வழக்கை பதிவு செய்தேன் எனத் தெரிவித்தார். 

இதையடுத்து “மனுதாரர் முழுமையான ஆவணங்கள் மற்றும் கமல் பேசியதற்கான முழு ஆதாரங்களை ஆகஸ்ட் 2 ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முழுமையாக சமர்ப்பிக்க வேண்டும். அன்றைய தினத்தில் அவரது வாக்குமூலத்தை நாங்கள் பதிவு செய்கிறோம். இவையெல்லாம் முடித்துவிட்டு கமலுக்கு சம்மன் அனுப்பலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.