delhi local areas twitter
இந்தியா

இம்முறை டெல்லி ஜி20 மாநாட்டுக்காக தீரைச் சீலைகள் கொண்டு மறைக்கப்படும் குடிசைப் பகுதிகள்!

ஜி20 மாநாட்டுக்காக டெல்லியில் உள்ள குடிசைகளை திரைச் சீலைகள் போட்டு மறைக்கும் பணி தொடங்கியிருக்கிறதாம். இதுகுறித்து அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Prakash J

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி20 தலைவர்கள், பல்வேறு நாடுகளின் சிறப்பு அழைப்பாளர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள், நம் நாட்டின் அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இதற்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சி நாட்களில் போக்குவரத்துப் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையிலும் பாதுகாப்பு கருதியும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அளிக்க டெல்லி அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டையொட்டி, நொய்டாவில் டி.என்.டி. பாலத்துக்கு அருகே உள்ள செக்டார் 16 சாலையோரத்தில் அமைந்துள்ள பல குடிசைப் பகுதிகளை அரசு அதிகாரிகள் மறைத்து வருகின்றனர். இதனால் தங்களுடைய வணிகம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காற்றோட்டத்தையும் திரைசீலைகள் பாதிக்கிறது என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றில் பேசியுள்ள அப்பகுதி மக்கள், “ஜி-20 மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் பலரும் வர இருப்பதால், அவர்களின் கண்களுக்கு இந்தக் குடிசைகள் தெரியாதபடி இருக்க திரைச் சீலைகளைக் கொண்டு மூடி வருகின்றனர். இதன்மூலம், இங்கு வசிக்கும் ஏழைகளை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள். இப்பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இந்த தடுப்பால் எங்களால் சுதந்திரமாக நடக்கக்கூட முடியவில்லை. தவிர, வாகனங்களையும் நிறுத்த முடியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச முயன்றோம். ஆனால், ’ஸ்கிரீன் கொண்டு மறைக்க டெண்டர் விடப்பட்டுவிட்டதால் பணியை நிறுத்த முடியாது’ என கூறிவிட்டனர். இதை மறைப்பதால் என்ன பிரயோசனம்? மாறாக, எங்கள் குடிசைவாசிகளின் அடிப்படைப் பிரச்னைகளை ஏன் தீர்க்கக்கூடாது?” என குமுறியுள்ளனர்.

ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை நொய்டா ஆணையத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி பிரபாஷ் குமார் மறுத்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தபோது, குஜராத் மாநிலம் காந்திநகர் செல்லும் வழியில் இந்திரா மேம்பாலம் பகுதிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதிகள் 6 முதல் 7 அடி உயரத்தில் தடுப்புச்சுவர்கள் எழுப்பி மறைக்கப்பட்டது.

2022 ஏப்ரல் மாதத்தில்கூட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தபோதும், அவருடைய பார்வையில் சிக்காதவண்ணம், அதே குஜராத் மாநிலத்தில் குடிசைப் பகுதிகள் மறைக்கப்பட்டன. தொடர்கதையாகும் இச்செயல்கள், கடும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.