Rajkumar Anand ட்விட்டர்
இந்தியா

டெல்லி அரசியலில் பரபரப்பு.. AAP அமைச்சர் திடீர் ராஜினாமா! கட்சியிலிருந்தும் விலகல்.. இதுதான் காரணமா?

டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

Prakash J

இந்தியாவில் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங், சத்யேந்தர் ஜெயின் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

இதுகுறித்து அவர், "ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்ட செயலைப் பார்த்த பிறகு நான் அதில் சேர்ந்தேன். இன்று, கட்சியே ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் விலக முடிவு செய்துள்ளேன்" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார். அவர், "ஆம் ஆத்மி கட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த எம்எல்ஏவோ, கவுன்சிலரோ இல்லை. அதே இனத் தலைவர்கள் தலைமைப் பதவிகளில்கூட நியமிக்கப்படுவதில்லை. நான் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன். தலித் மக்களுக்காக என்னால் பணியாற்ற முடியவில்லை என்றால், கட்சியில் இருப்பதில் அர்த்தமில்லை" எனத் தெரிவித்தார்.

ராஜ்குமார் ஆனந்த்தின் ராஜினாமா குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சௌரப் பரத்வாஜ், “பாஜக தந்த அழுத்தம் காரணமாகவே ராஜ்குமார் ஆனந்த் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதுடன், கட்சியிலிருந்தும் விலகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: 'தில்லுமுல்லு' பட பாணி: பொய் சொல்லி மேட்ச் பார்க்க லீவு.. நேரலையில் மேலாளரிடம் சிக்கிய RCB ரசிகை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணமோசடி வழக்கு தொடர்பாக ராஜ்குமார் ஆனந்தின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் (ED) சோதனை நடத்தியதுடன், ரூ.7 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் அவர் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது. தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ளதால், காலியாக உள்ள இலாகா எப்படி ஒதுக்கப்படும் என்பது குறித்து தெரியவில்லை.

அதிஷி

முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமைச்சர் அதிஷி, “பாஜகவில் சேராவிட்டால் நீங்கள் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என எனக்கு மிரட்டல் வந்தது” என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராஜ்குமார் ஆனந்த் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: ஹசரங்காவுக்குப் பதில் மாற்று வீரர்; சர்ஃப்ரைஸ் கொடுத்த சன்ரைசர்ஸ்! யார் இந்த விஜயகாந்த் வியஸ்காந்த்?