டெல்லி மெட்ரோ twitter page
இந்தியா

முத்தமிட்டு சர்ச்சையான இளம் ஜோடி.. அதிரடி முடிவெடுத்து களத்தில் இறங்கிய டெல்லி மெட்ரோ நிர்வாகம்!

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்ஜோடி ஒன்று, முத்தமிட்டுக் கொண்டதையடுத்து, ரோந்துப் பணியில் போலீசாரை ஈடுபடுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Prakash J

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நாட்டின் சில முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நகரங்களில் டெல்லியும் ஒன்று. இந்த நகரத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் கடந்த சில நாட்களாக, முகம் சுளிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் ஓர் இளம் ஜோடியின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அந்த வீடியோவில், மெட்ரோ ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருக்கும் காதலனின் மடியில் இளம்பெண் படுத்துக்கொண்டு, இருவரும் முத்தமிடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைக் கண்டு எரிச்சலடைந்த பயணிகள், ’மெட்ரோ ரயிலில் செய்ய வேண்டிய காரியமா’ எனக் கேள்வி எழுப்பியதுடன், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் புகார் செய்தனர்.

Delhi Metro

இதுகுறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம், ”பிற பயணிகளுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது மற்ற சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய எந்தவொரு அநாகரிகமான/ஆபாசமான செயலிலும் ஈடுபடக்கூடாது” என தெரிவித்திருந்ததுடன், ’பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்’ என அறிவித்திருந்தது. ’இதுபோல், அநாகரிக செயல்கள் நடைபெற்றால், அதுகுறித்து புகார் அளிக்கலாம்’ என அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், ரயில் நிலையங்களிலும் பெட்டிகளிலும் ரோந்து பாதுகாப்பினை அதிகப்படுத்தும்படி டெல்லி போலீஸுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மெட்ரோ அதிகாரி ஒருவர், “அந்த ஜோடியின் வைரல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மெட்ரோ நிர்வாகம் சீருடையணிந்த காவலர்கள் மற்றும் சாதாரண உடையில் இருக்கும் டெல்லி மெட்ரோ பணியாளர்களை ரோந்து வரச் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

delhi metro

ஒரு பழைய வழித்தடத்தைத் தவிர அனைத்து வழித்தடங்களில் ஓடும் ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. தற்போது நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் மூலம் கேமராக்கள் இல்லாத பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அனைத்து விரும்பத்தகாத நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களைத் தடுத்த உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே டெல்லி மெட்ரோ ரயிலில், ஓர் இளம்பெண் அரைகுறை ஆடையுடன் பயணித்ததும், இளைஞர் ஒருவர் ஆபாச படம் பார்த்தப்படியே சுய இன்பம் அனுபவித்ததுமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

டெல்லி மெட்ரோ

தற்போது இளம் ஜோடியின் முத்தமும் அதிகளவில் பேசப்பட்டதால்தான், டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் மெட்ரோவைத் தவிர, மற்ற ரயில்களில் எல்லாம் போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.