தன்னை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பாஸ்ச்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் தரம்வீர் தய்யா (35). இவர் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், தரம்வீர் தய்யாவை பார்த்து குரைத்துள்ளது. தொடர்ந்து தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த அவர், அந்த நாயின் வாலை பிடித்து தூக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் நாய் கத்தியுள்ளது.
இதனை கேட்ட அந்த நாயின் உரிமையாளர் ரக்ஷித் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது நாயின் வாலை பிடித்து மூர்க்கமாக இழுத்துக் கொண்டிருந்த தரம்வீர் தய்யாவை ரக்ஷித் தாக்கியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களின் சண்டையை தடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. ஒருகட்டத்தில், அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து வந்து ரக்ஷித்தையும், மற்றவர்களையும் தரம்வீர் தாக்கினார். தனது உரிமையாளரை பாதுகாப்பதற்காக அவரது நாய், தரம்வீரை கடித்துள்ளது. இதையடுத்து, அந்த நாயையும் இரும்புக் கம்பியால் அவர் தாக்கினார். இதில் நாய் அங்கேயே மயங்கி விழுந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு தரம்வீரை மடக்கிப் பிடித்தனர். இந்த தாக்குதலில் ரக்ஷித் உட்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்