ஓம் பிர்லா, அஞ்சலி பிர்லா எக்ஸ் தளம்
இந்தியா

'UPSC Exam'இல் முறைகேடாக தேர்ச்சியா? வழக்கு தொடர்ந்த ஓம் பிர்லா மகள்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

Prakash J

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவே மீண்டும் பதவியில் உள்ளார். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா. இவர், கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து அகாடமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா, தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார். தனது வெற்றி குறித்து அஞ்சலி பிர்லா PTIக்கு அளித்துள்ள பேட்டியில், ”தந்தை ஓம் பிர்லாவின் பொதுச் சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது. மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்துவரும் சேவையைப்போல தானும் இந்தச் சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றிருந்தது பேசுபொருளானது. அவர், தேர்வு எழுதாமலேயே வெற்றிபெற்றிருப்பதாகவும் அவருடைய தந்தையின் செல்வாக்கை வைத்தே தேர்வில் வெற்றிபெற்றதாகவும், தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்த அவர் எப்படி படித்திருப்பார் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஏற்கெனவே நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து தேர்ச்சி பெற்ற விவகாரமும் தற்போது இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்தே அஞ்சலி பிர்லாவின் தேர்ச்சி குறித்து இணையத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா திட்டவட்டமாக மறுத்தார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில்தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அஞ்சலி பிர்லா தெரிவித்தார்.

இதையும் படிக்க: மத்திய பட்ஜெட் 2024| வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.. முழு விவரம்

இந்த நிலையில், தன்மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைதள பதிவுகளை நீக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ’யுபிஎஸ்சி தேர்வில் நான் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எனக்கும், எனது தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளன. அதனை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும்' என அதில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க அஞ்சலி பிர்லா தரப்பில் முறையிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்களில் அஞ்சலி பிர்லா குறித்து வெளியிடப்பட்டுள்ள அவதூறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக எக்ஸ், கூகுள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம் | வரதட்சணைக் கொடுமையில் கர்ப்பிணி படுகொலை.. உடலை தீவைத்து எரித்த கொடூரம்!