delhi high court x page
இந்தியா

இறந்த மகனின் விந்தணுவைக் கேட்ட பெற்றோர்; மறுத்த மருத்துவமனை.. அதிரடி காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம்!

இறந்த மகனின் விந்தணுவைச் சொத்தாகக் கருத முடியும் என்றும் அதைப் பெற்றோர் வைத்துக்கொள்ள உரிமை உள்ளது என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

Prakash J

டெல்லியைச் சேர்ந்தவர் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான இவருக்கு, புற்றுநோய் இருப்பது 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கண்டறியப்பட்டது. இதையடுத்து புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு முன்னர், தனது விந்தணு மாதிரியை உறைய வைப்பதற்கு முன் அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து இந்தர் சிங், தனது விந்தணு மாதிரியை 2020ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி அதற்கான மையத்தில் போய் சேமித்துள்ளார். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

இந்த நிலையில், ப்ரீத் இந்தர் சிங் பெற்றோர் அந்த விந்தணு மருத்துவ மையத்தை அணுகி, தங்கள் மகன் சேமித்து வைத்திருக்கும் விந்தணுவைத் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால், அந்த மையமோ தர மறுத்துவிட்டது. இதையடுத்து, ’தங்கள் மகனின் உறையவைக்கப்பட்ட விந்தணு மாதிரியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதைக் கொண்டு வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தையை வளர்க்க விரும்புகிறோம். மேலும், தனது தலைமுறையைக் காக்க விரும்புகிறோம்’ என அவரின் பெற்றோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதையும் படிக்க: ”அந்த ட்ரெஸ் உனக்கு சரியில்ல.. மீறினா ஆசிட் ஊத்துவேன்” - மிரட்டிய இளைஞர்.. நிறுவனம் கொடுத்த ஷாக்!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா சிங், ”மனைவி அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்கீழ் அவர்கள் சட்டப்பூர்வ வாரிசுகளாக மாறியதால், பெற்றோருக்கு விந்தணுவுக்கு உரிமை உண்டு. நபரின் விந்தணுவைச் சொத்தாக பாவிக்க முடியும் என்பதாலும், இந்துமத சொத்துரிமை சட்டத்தின்படி பெற்றோருக்கு மகனின் சொத்தில் முதல் உரிமை உள்ளது என்பதாலும் இறந்த மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுவை பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளார். மகனின் விந்தணுவை வைத்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி, கடந்த 2002ஆம் ஆண்டு காசாவில் கொல்லப்பட்ட 19 வயது ராணுவ வீரரின் பெற்றோருக்கு, அவரது விந்தணுவை வழங்க இஸ்ரேல் அரசு சட்டப்பூர்வ அனுமதி அளித்தது தொடர்பான பல வழக்குகளை மேற்கொள் காட்டினார்.

இதையும் படிக்க: போய் பிச்சை எடுங்க’ - விரட்டிய பிள்ளைகளால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. ராஜஸ்தானில் கொடூரம்!