அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை ட்விட்டர்
இந்தியா

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய மனுதாரர்.. ரூ.75 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக, ஜாமீன் கோரிய நபருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

இந்தியாவின் ஜனநாயக தேர்தல் பெருவிழாவுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

அமலாக்கத் துறை, அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில் முதல்வர் பதவிக்காலம் முடியும் வரை அமலாக்கத்துறை உள்ளிட்ட குற்றவழக்குகளிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறப்பு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் அந்த மனுவில் பாதுகாப்பு, மருத்துவச் சிகிச்சை குறைபாட்டைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்குமாறு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ’பொதுநல மனு விசாரணைக்கு உகந்ததல்ல’ எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிக்க: பூச்சிக்கொல்லி மருந்து அதிகம்.. ஆய்வில் தகவல்.. எவரெஸ்ட் மீன் மசாலாவைத் தடை செய்த சிங்கப்பூர்!