எழுத்தாளர் அருந்ததி ராய்  முகநூல்
இந்தியா

காஷ்மீர் குறித்து 2010ம் ஆண்டு பேசிய கருத்து! அருந்ததி ராய் மீது பாய்கிறது உபா சட்டம்! பின்னணி என்ன?

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

PT WEB

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருந்ததி ராய், ”காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. ராணுவ பலத்தைக் கொண்டு காஷ்மீரை இந்தியா கைப்பற்றியது. காஷ்மீர் விடுதலைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ” என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், டில்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது இருவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

இதுதொடர்பான செய்திக் குறிப்பில், காஷ்மீர் பிரிவினைப் பற்றி இருவரும் பரப்புரை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எழுத்தாளர் அருந்ததி ராய், தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அருந்ததி ராய் மீது 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்திருப்பது மர்மமாக இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில்,

அருந்ததி ராய் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் .குற்றம் சுமத்தப்படக்கூடிய கருத்துக்களை தேர்தல் நேரத்தில் பேசிய பாஜக தலைவர்கள் மீது சட்டம் மௌனம் காப்பது ஏன்?” என்று மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.